வாழ்க்கை தரம்

வாழ்க்கை தரத்தை நிர்ணயிப்பது பணமாகவோ, புகழாகவோ, பதவியாகவோ இருக்கக்கூடாது..வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிப்பது மனிதாபிமானம் சார்ந்த செயல்களால் மட்டுமே இருக்க வேண்டும்.

எந்த ஒரு இடத்தில் பணத்தால் ஒருமனிதன் அங்கீகரிக்கப்படுகிறானோ , அங்கிருந்து அவன் சற்று விலகி சென்றால் அவன் வாழ்வு மகிழ்ச்சியாக மாறும். இல்லையேல் தான் அங்கீகரிக்கப்பட வேண்டும். அதற்கு நான் நல்லவனாக மட்டுமிருந்தால் போதாது .. நல்லதோ, தீயதோ எதுவென்றாலும் செய்து சீக்கிரம் பணக்காரன் ஆகிவிட வேண்டும். நானும் சமுதாயத்தால் மதிப்புள்ளவன் என அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற ஓட்டத்தை ஓடத் தயாராக வேண்டும்.

சிந்தியுங்கள் பெற்றோரே!!! உங்கள் குழந்தை சிறு வயதில் நல்லது செய்தால் எவ்வளவு பாராட்டுவீர்கள். அதுவே அக்குழந்தை வளர்ந்து சமுதாயத்தில் நல்ல மனுஷன் என்ற பெயர் மட்டும் வாங்கினால் உங்களுக்கு பெருமை தான். இல்லை என்று சொல்லவில்லை. மேலும் அக்குழந்தை வீட்டிற்கு சம்பாதித்து தராமல் பொதுச் சேவை செய்தால் கிடைக்கும் பெயர் *பிழைக்கத்தெரியாதவன்*…

இந்நிலை மாற வேண்டும்..

சுயநல எண்ணம் களையப்படவேண்டும்..

பணம் வந்துவிட்டால் எல்லாம் வந்துவிடும் என்ற தவறான எண்ணம் களையப்படவேண்டும்..

வாழ்வில் எல்லாம் போதும் என்ற நிறைவு மட்டுமே நமக்கு நிம்மதியைத் தரும். அது ஒன்றையே செய்வோம்.. நல்லதையே செய்வோம்..

வாழ்வின் தரம் பணத்தில் அல்ல குணத்தில்!!!!

வெளிநாட்டு வாழ்க்கை கஷ்டங்கள்

திருமணம் முடிந்தது.. அன்பான கணவர்.. கணவரின் அரவணைப்பும் அன்பும் ஒரு மாதம் கூட நீடிக்கவில்லை…வெளிநாட்டு பயணம்.. அழுகை, வேதனை துக்கம், பிரிவின் தாக்கம் தனிமை கொல்லாமல் கொன்றது… பயணம் புறப்பட்ட போது ஆரத்தழுவி, நெற்றியில் முத்தம், கண்களில் கண்ணீர், வாயில் மலர்ந்த வார்த்தை ” அன்பே, நீ கருவுறலாம், கரு உருவாகாமலும் இருக்கலாம் … எதற்கும் கலங்காதே.. அதிகபட்சம் ஒரு வருடம்தான்… சீக்கிரம் வந்து விடுகிறேன்… எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக் கொள்”… நள்ளிரவு 12 மணி.. குடும்பத்தில் சோகம்… என் கண்கள் அவரையே பார்த்தன.. அவர்‌ என்னை பார்ப்பதை தவிர்க்கவே தவிர்த்தார்.. முடியவில்லை.. காரின் ஏறினதும் முதலில் பார்த்தது என்னை.. அந்த வேதனையின் கண்கள் என்னிடம் ஆயிரம் பேசின.. கார் நகர.. அந்தக் கையின் அசைவு சற்று தள்ளாட.. கண்கள் நெடுநேரம் அக்காட்சியைக் காண கொடுத்து வைக்கவில்லை.. ஒரு வருடம்.. ஒரு வருடம்… எப்படி கழிப்பேன்?…

கடந்த இரு வாரமாக இந்தப் பிரிவு தான் வேண்டாம் என்று நினைத்திருந்தேன்.. விருந்து வீடு, என் வீடு என ஒரு வீட்டையும் விட்டுவைக்காமல் அவரை அணைத்துக் கொண்டு போகிறாயா? நான் எப்படி பிரிஞ்சி இருப்பேன்? தீராத அழுகை.. தேற்றிட முடியாத அவரின் நெருங்கிய உள்ளம் தெரிந்து என் மனதை தேற்றிக்கொண்டேன்.. முடியவில்லை இறுதியில் அழுதே விட்டேன்…

வேண்டாம் என்ற‌ காட்சி நடந்து விட்டதால், இரவு அழுகை வரவில்லை.. மாறாக மன இறுக்கம் கண்களை மூடி கடவுளே என் உயிரை எடுத்து விடும் அல்லது துயரைத் தாங்கும் சக்தியைத் தாரும்.. என்ற பெருமூச்சில் வந்ததே தூக்கம்..

மறுநாள் பெற்றோரின் வீடு.. கலகலப்பான வீடு இன்று மயான அமைதி.. என்னால் யாரும் கவலை கொள்ளக்கூடாது என்று அழுகையை வருத்தத்தை உள்ளத்தில் புதைத்து சிரித்தேன். மகள் திட மனதுக்காரி என்று எண்ணி அடுத்த இரண்டொரு நாளில் கணவரின் வீட்டிற்குள் கொண்டு விட்டார் என் தந்தை பாவம் அவருக்கு தெரியவில்லை மகள் வேதனையில் இருக்கிறாள் என்று….

மாமியார் வீட்டில் சகஜமாய் கழிக்க முடியவில்லை.. எங்கு நோக்கினும் கணவனின் முகம்… எந்த செயல் செய்தாலும் அவரின் ஞாபகம்… கொடுமை தனிமை கொடுமைதான்…

இரண்டு வாரங்கள் மாதவிடாய் தள்ளிப்போக எல்லோரும் ஆர்வமாய் விசேஷமாக இருக்காளோ? என்று ஆனந்தமாய் கேட்க.. அவர்கள் முன் புன்னகைத்துவிட்டு, இந்நேரத்தில் அவரை தேடுகிறது அவர் இல்லையே என்ற ஏக்கம்.. தனிமையில் அழுத நாட்கள்..

கர்ப்பம் உறுதி ஆகிவிட்டது.. மாமியார் என் அப்பாவுக்கு கால் செய்ய அவர்கள் சந்தோஷம் அடைய.. என் உள்ளம் ஏனோ என் கணவனை தேடியது.. அவரின் தொடுதலை ஏன் அடிவயிறு அதிகம் தேடியது.. சொன்னேன்.. கேட்டார்… வழியில்லை வருவதற்கு… வலியில்லை இது எல்லாம் பெருசா ரெண்டு பட்டண தட்டினா முகம் பார்த்து பேசலாம்.. இதற்கு இவ்வளவு வேசமா?? பலரின் ஏளன பேச்சு… இதற்கு பயந்து ஆசைகளையும், துக்கத்தையும், சந்தோசத்தையும் என் கணவரை தவிர வேறு யாரிடமும் சொல்ல மனம் வரவில்லை… எல்லா விஷயத்தையும் அவரிடம் சொன்னதால் என்னவோ எங்களுக்குள் எழுந்த சண்டை சச்சரவுகள், பூசல்கள் ஏராளம். ஆயினும் அவை அனைத்தும் சேர்ந்து வாழத் துடிக்கும் இரு இதயங்களின் உணர்வுப்பூர்வமான துடிப்பே என்பதை பின்நாளில் உணர்ந்தேன்… மூன்றாம் மாதம் நான்காம் மாதம் ஐந்தாம் மாதம் ஆறாம் மாதம் ஏழாம் மாதம் எட்டாம் மாதம் ஒன்பதாம் மாதம்… என்ன ஒரு பத்து மாசம் தானே இதுக்கு போய் இவ்வளவு நடிப்பா??? வாழ்த்து பார்த்தா அதிலுள்ள சங்கடம் புரியும்…

எதார்த்தமான சில விஷயங்களை மட்டும் பகிர்கிறேன்

1. என்னங்க நான் கர்ப்பமாய் இருக்கேன்.. கேட்க ஆளில்லை..

2. இதை சாப்பிடு… வாங்கித் தர ஆயிரம் பேர் இருந்தாலும் என் கணவர் என்னுடன் இல்லை..

3. வயிறு பெரிதாக பெரிதாக என்னங்க நம்ம பிள்ளை பெருசாகி வருதுன்னு சின்ன சின்ன சந்தோஷங்களை பகிர என்னுடன் நீ இல்லை.

4. ஒரு நாள் செக் அப் ஆவது என் கணவர் கூட்டிட்டு போவாரா ஏக்கம்..

5. நள்ளிரவில் முதுகு வலி கால் வலி யாரை தடவ சொல்வேன்.. நானே சமாளித்தேன்..

6. வயிற்றிலிருக்கும் குழந்தையுடன் தாய் தந்தை பேசினால் குழந்தையின் வளர்ச்சி அதிகமாகும்.. இந்தப் பெரும் பாக்கியம் என் பிள்ளைக்கு இல்லை..

7. வயிறு பெரிதாகி விட்டது என் கணவரின் கை வயிற்றில் இருக்கும் என் குழந்தையின் மேல் பட வேண்டும்.. ஆசை.. ஆனால் அன்பர் இங்கில்லை..

8. வயிற்றின் மேல் வாய்வைத்து குழந்தையுடன் கொஞ்சி பேச வேண்டும் என் கணவர்.. நடக்கவில்லை..

9. சமையல் செய்து ஒரு நாளேனும் தந்தவர் கைகளால் ஒரு பிடி சோறு அவரை அள்ளித்தர சொல்ல ஆசை.. நடக்கவில்லை..

10. வளைகாப்பு.. அவரே இல்லை வேண்டாம்..

11. அடியெடுத்து நடக்கும்போது அருகில் இருக்கும் பெற்றோரின் கைகளை இறுகப் பிடித்து பெருமூச்சு விட்டு நடந்தேன்.. என் கணவர் அருகில் இல்லாத காரணத்தால்..

12. காலையில் மாலையில் நடைபயணம்.. நானும் அவரும் சேர்ந்து நடக்க ஆசையாக இருந்தது.. சொல்லக்கூட இல்லை.

13. புரண்டு படுக்க முடியாது.. ஒரு பக்கம் வலி.. ஏங்கினேன்.. வலியை சொல்ல அல்ல.. உன் கைகளை முதுகில் வைத்து அவருடைய விடு என்று சொல்ல காதுகொடுத்துக் கேட்க நீ இல்லை.

14. சாப்பாடு விஷயத்தில் கண்டிப்பு.. சீனி எடுக்காத அம்மா.. கருப்பட்டி காபி.. கீரை.. சூப்பு.. எல்லாம் ஒரே ஒரு சிறிய எஸ்எம்எஸ் … விஷயம் புரிகிறது கடைபிடித்தேன்.. ஆனால் கடமைக்கு.. நீ இருந்திருந்தால் உன் அன்பு கண்டிப்புக்கு பயந்து செய்திருப்பேன்.. அழகான விஷயங்களை நானும் இழுந்தேன்

15. நிறைய வேலை செய்யவேண்டும் அப்போதுதான் சுகப்பிரசவம்.. வேலை செய்வேன்.. வீடு தூப்பு, பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல் எல்லாம் செய்தேன்.. செய்த அனைத்து வேலையும் நீ இருந்த ஒரு மாதம் எனக்கு நீ செய்து தந்தது தான் ஞாபகம் வந்தது..

16. ஆணா பெண்ணா? எனக்கு ஆண்.. எனக்கு பெண்ணே… இன்ப சண்டை தொலைபேசியில் தொலைந்தது..

17.. தொலைந்தது எல்லாம் தொலைந்தது எல்லாவற்றுக்கும் மேல் குழந்தை பேற்றின் வலி… கொடிய வேதனையிலும் உன் கரங்களை பற்றி மார்போடு அணைத்து ஒரு முறை நெற்றியில் முத்தமிட்டு அன்பாய் பிரசவ வார்டுக்கு அழைத்து செல்வாய் என்ற கனவு அடியோடு முடங்கியது,….

18. பிரசவ வலி பத்து நாள் ஆஸ்பத்திரி வேதனை.. இருந்து பார்க்க நீ இல்லை..

19. என்ன குழந்தை பிறந்தது? மனைவி எப்படி இருக்கிறாள்? என்ற கேள்வியோடு எல்லாம் முடிந்தது

20.. பிறந்த குழந்தை உன் கையில் தவழ வேண்டும் என்று நினைத்தேன்.. குழந்தை பிறந்து இன்றோடு மூன்று மாதங்கள் முடிந்தது குழந்தையின் மழலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.. குழந்தையின் மழலையை ஆவது கொஞ்ச சீக்கிரம் வா என்று கெஞ்சுகிறேன்..

இப்படிக்கு

வெளிநாட்டு வாழ்க்கையால் நொறுங்கி அழும் சாதாரண பெண்மணி..

15